சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6ஆம் தேதி இலக்கை அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது பல்வேறுகட்ட பயணங்களைக் கடந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வந்தது. அண்மையில் ஆதித்யா விண்கலத்தின் 2-ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1 நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சோம்நாத், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6 ஆம் தேதி அதன் இலக்கான லாக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த லாக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் கூறினார்.