ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில், தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மேலும் இரண்டு நாட்களுக்கு இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன.
இரயில் தண்டவாளங்களில் இருந்த ஜல்லிகற்கள் அடித்து செல்லப்பட்டு, இரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால், இரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, பல இடங்களில் இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு இரயில், திருநெல்வேலி – தூத்துக்குடி, திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாஞ்சிமணியாச்சி – திருச்செந்தூர் முன்பதிவில்லா இரயில் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுள்ளது.