துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் தென் அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கியது. விமானத்தில் ஆள்கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரான்ஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.
பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்த சில பயணிகள் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்குச் சென்றுள்ளனர்.
3௦௦-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயிலிருந்து ஒரே விமானத்தில் வெளிநாட்டிற்குச் செல்வது மனித கடத்தல் தொடர்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரான்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.