உலகக்கோப்பையில் போது ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாத நிலையில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு முன்னரே டிரேடிங் முறையில் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை அணி நிர்வாகம் வாங்கியது. மேலும் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக அந்த நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து மும்பை அணியின் சமூகவலைத்தள பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தினர். மேலும் பல மும்பை அணியின் ஜெர்சியை எரித்தனர்.
அதேபோல் மும்பை அணியின் வீரர்களான சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரை காயம் குணமடையவில்லை என்பதால் அவர் ஐபிஎல் தொடரிலேயே விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா விலகிவிட்டால் மீண்டும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதனை ரோகித் சர்மா ஏற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தற்போது மும்பை அணி நிர்வாகத்திற்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.