தமிழகத்தில் உள்ள பிரபல கோவிலில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, சுவாமியை தரிசனம் செய்தால், விரைவில் குழந்தை கிடைக்கும் என்பதால், இந்த கோவிலில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த பெருமைக்குரிய கோவில் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ளது. ஆம், ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி கோவில்தான் அந்த கோவில். இந்த கோவில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 11-வது திருத்தலமாகும்.
இந்த ஸ்தலம் சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய மூன்று சிவமூர்த்திகள், பிரம்ம வித்யாம்பிகை, சுவேத மகாகாளி, சௌவ்பாக்கிய துர்க்கை ஆகிய மூன்று சக்திகள் அமைந்துள்ள தலமாகும். அதாவது, மூன்று மூர்த்தி, மூன்று அம்பாள், மூன்று தீர்த்தம், மூன்று விருட்சம் என்று மிகவும் சிறப்பு பெற்ற ஸ்தலமாக அமைந்துள்ளது.
மேலும், இந்த கோவிலுக்கு ஆதி சிதம்பரம் என்றும் ஒரு பெயர் உண்டு. உலகத்தில் உள்ள உயிர்கள் உய்யும் வண்ணம் 1,008 விதமாக சிவன் தாண்டவம் புரிந்தார் என்பது சிறப்பு.
திருவெண்காடு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதாவது, இங்குள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
மேலும், இந்த திருத்தலத்தில் சுவாமியை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், செல்வம், கலை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.