நமது தேசிய கல்விக் கொள்கை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் மாநாடு 2023-ல் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய ஜெக்தீப் தன்கர்
நாட்டில் நாம் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். நமது பாரதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறிக் கொண்டிருக்கிறது. நான் 1989-ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். நான் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். பல அம்சங்களைப் பல ஆண்டுகளாக நான் கவனித்து வந்துள்ளேன்.
இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பாருங்கள்! ஒரு பில்லியன், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலைகளில் இருந்து இப்போது நாம் 600 பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டுள்ளோம்.
1960 ஆம் ஆண்டில் நமது சொந்த செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் வழியாகச் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்களை நாம் செலுத்துகிறோம். இதுதான் இந்தியா கண்ட வளர்ச்சி.
பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு மகத்தான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் அதைப் பாதுகாக்க வேண்டும். பஞ்சாப் பல்கலைக்கழகம் உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற நாம் உழைக்க வேண்டும்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இங்கு படித்தவர்கள் சிலர் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் பிரதமர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், விஞ்ஞானிகள், முக்கிய அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், தொழில்முனைவோர் என பல முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளனர். முன்னாள் மாணவர்களின் நிகரற்ற பலம் கொண்ட ஒரு பல்கலைக்கழகம் இது.
நமது தேசிய கல்விக் கொள்கை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. படிப்பு என்று வரும்போது அது நதிபோல இருக்க வேண்டும். மனித மனம் ஒரு நதியைப் போல ஓடட்டும்.
பழங்கால பாரதத்தில் நாளந்தா, தக்ஷிலா போன்ற பல பல்கலைக்கழகங்கள் இருந்தன என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அந்த அளவிற்கு உலகளாவிய நிறுவனங்களை நாம் உருவாக்க வேண்டும். செனட் அல்லது சிண்டிகேட் அல்லது அரசு அல்லது துணைவேந்தரின் பலத்தில் மட்டும் அதைச் செய்ய முடியாது. முன்னாள் மாணவர்களின் பங்களிப்பால் மட்டுமே அந்தச் சாதனையை அடைய முடியும்.
அறிவு மற்றும் அனுபவத்தை ஒருங்கிணைக்கவும், பல்வேறு நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களின் பலத்தை வெளிப்படுத்தவும் இந்த நாட்டில் நேரம் வந்துவிட்டது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஐஐஎம்-கள் உள்ளன. ஐஐடிகள் உள்ளன. அறிவியல் நிறுவனங்கள் உள்ளன.
பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. முக்கியமான கல்லூரிகள் உள்ளன. இப்போது இந்த நிறுவனங்களின் சிறந்த முன்னாள் மாணவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால், சக்தி வாய்ந்த கொள்கைகளை உருவாக்க முடியும்.
நாட்டில் பெண் கல்வியும் பெண்களின் நிலையும் இப்போது மேம்பட்டுள்ளது. 30 ஆண்டு காலப் பெரும் போராட்டம் மற்றும் தோல்விக்குப் பிறகு, தற்போது மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கழிவறைகள் இல்லாத காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பெண்களின் சிக்கலான நிலையை கற்பனை செய்து பார்க்கிறேன். இப்போது ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை உள்ளது. எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியாவின் வேகமான வளர்ச்சி அதன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிப்படும். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பலம் குறித்து எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன், திறமை, அனுபவம் உங்களிடம் உள்ளது எனத் தெரிவித்தார்.