இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்று நான்காவது நாளாக இப்போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 219 ரன்களும், இந்தியா 406 ரன்களும் எடுத்து இந்தியா 187 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் இன்னிங்சின் முதல் பேட்டிங் முடிவடைந்துள்ளது.
இரண்டாம் இன்னிங்சில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 261 ரன்களை எடுத்து 75 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பெத் மூனி 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. இதில் எல்லிஸ் பெர்ரி 45 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 73 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய அலிசா ஹீலி 32 ரன்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 27 ரன்களும் குவித்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 261 ரன்களை எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக சினே ரானா 4 விக்கெட்களும், ராஜேஸ்வரி, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பூஜா 1 விக்கெட்டை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா 1 பௌண்டரி அடித்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 6 சிக்சர்கள் என மொத்தமாக 38 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 75 ரன்களை அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருது இந்திய அணியின் சினே ரானாவுக்கு வழங்கப்பட்டது.