ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று காலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 2 கேப்டன்கள், மாநில டி.எஸ்.பி. ஒருவர், 2 வீரர்கள் என 4 பேர் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிரவாத வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாநிலத்தின் ரஜோரி செக்டாரில் உள்ள தேரா கி காலி வனப்பகுதியில் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது, தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, ஸ்ரீநகரில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் ஆகியோர் தீவிரவாதத் தாக்குதலில் பலியாகினர்.
இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தின் கந்தமுல்லா பகுதியில் உள்ள மசூதியில் ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் எஸ்.பி. (எஸ்.எஸ்.பி.) முகமது ஷாபி தொழுகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் முகமது ஷாபி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது ஷாபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதியை போலீஸார் சுற்றி வளைத்திருக்கிறார்கள்.
மேலும், துணை இராணுவப் படையும் வரவழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ,கந்தமுல்லா பகுதி முழுவதையும் இராணுவ வீரர்களும், மாநில போலீஸாரும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.