அமெரிக்க இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் நெவார்க் நகரில் உள்ள இந்துக்களின் சுவாமி நாராயண் கோவில் சுவற்றில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் ஸ்பிரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
இதை இந்து அமெரிக்கன் அறக்கட்டளை புகைப்படம் எடுத்து, தங்களது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதையடுத்து, இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அப்பதிவில், “கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் இந்து கோவில் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்களை கண்டறியும் நோக்கில் நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சக்திகளுக்கும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கும் இடமளிக்கக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் சார்பில் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றார்.