இயக்குநர் அட்லீ ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியிருந்த நிலையில் தற்போது புதிய அலுவலகத்தை மும்பையில் நிறுவியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்று பின்னர் பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து அதிலும் வெற்றி பெற்ற பின் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ள இயக்குநர் தான் அட்லீ.
தமிழில் ராஜா ராணி என்ற தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்ற பின், அடுத்ததாகத் தளபதி விஜய் அவர்களை வைத்துத் தெறி, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஷாருக்கான் – விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்கப் போவதாகக் கூறிவந்தார். தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இடத்தில் அவர் கதை சொல்லி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் அட்லி. இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கிய அட்லி தற்போது அங்கே ரூ.40 கோடி மதிப்பில் அலுவலகம் ஒன்றை வாங்கி உள்ளார்.
தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என்று ஈடுபடப் போவதால் இப்படி புதிய அலுவலகம் திறந்திருக்கும் அட்லி, அடுத்து ஷாருக்கான் மட்டுமின்றி பாலிவுட்டில் பிரபலமாக உள்ள இன்னும் சில கதாநாயகர்களிடத்திலும் கால்ஷீட் வாங்கி, அடுத்தடுத்து ஹிந்தியில் படங்கள் இயக்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.