ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஆளில்லா விமானத் தாக்கலுக்குள்ளான கச்சா எண்ணெய்க் கப்பல், இந்திய போர்க் கப்பலின் பாதுகாப்புடன் மக்களூரு நோக்கி பாதுகாப்பாக வந்துகொண்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்திருக்கிறது.
சௌதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி.செம் புளூட்டோ என்கிற சரக்குக் கப்பல் வந்து கொண்டிருந்தது.
இந்தக் கப்பல் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்தியப் பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென அக்கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கப்பலில் தீப்பற்றியது. எனினும், உடனடியாக தீ அணைக்கப்பட்டது. ஆனாலும், கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இக்கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் 1 நேபாளி ஆகியோர் இருந்தனர். இத்தகவல் இந்தியக் கடற்படைக்கு கிடைத்தவுடன், போர்க் கப்பல் விக்ரம் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, பணியாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், கப்பலும் பாதுகாப்பாக மங்களூரு நோக்கி பயணித்து வருதாகவும், இக்கப்பல் திங்கள்கிழமை மாலைக்குள் மங்களூருவை வந்தடையும் என்றும் இந்தியக் கடற்படை தெரிவித்திருக்கிறது.
விசாரணையில் இக்கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே, செங்கடல் பகுதியில் செல்லும் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.