இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி போராடி வெற்றி பெற்றது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.
இதில் நேற்று நடைபெற்ற 39-வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. தெலுகு டைட்டன்ஸ் அணி மிக மோசமான நிலையில் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஒன்று, இரண்டு இடமாவது முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
தெலுகு டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார். அவரை மட்டும் நம்பியேப் காலத்தில் இறங்கியது அந்த அணி.
ஆனால், பெங்களுரு புல்ஸ் அணியில் தடுப்பாட்டம் மிக சிறப்பாக இருந்ததால் துவக்கம் முதலே பவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறினார். இந்த நிலையில், முதல் பாதியில் பெங்களுரு புல்ஸ் 16 – 12 என்ற அளவில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியிலும் புல்ஸ் அணி முன்னிலையில் இருந்தது. கடைசி 4 நிமிடங்கள் இருந்த போது அந்த அணி 30 – 22 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணிய நிலையில், பெங்களுரு அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது பவன் செஹ்ராவத்தின் சூப்பர் ரெய்டு.
கடைசி 3 நிமிடங்கள் இருந்த போது, பெங்களுரு அணியில் மூன்று வீரர்கள் களத்தில் இருந்த நிலையில் பவன் ரெய்டு சென்றார். அவர்கள் மூவரையும் ஒரே ரெய்டில் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
பெங்களுரு அணி ஆல் – அவுட் ஆனதால் கூடுதலாக 2 புள்ளிகளும் கிடைத்தது. இதை அடுத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்தது பெங்களுரு. எப்படியோ போராடி ஆட்ட நேர முடிவில் பெங்களுரு புல்ஸ் 33 – 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி தான் ஆடிய ஏழு போட்டிகளில் தன் ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.