மகாராஷ்டிராவில் வங்கி மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் கேதார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுனில் கேதார்.
இவர், கடந்த 2002-ம் ஆண்டு நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார். அப்போது, தனியார் நிறுவனம் மூலம் நிதி முதலீடு செய்யும்போது விதிகள் மீறப்பட்டதாகவும், இதனால் வங்கிக்கு 125 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கேதார் உட்பட 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 22-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட கேதார் உட்பட 5 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. கேதார், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவை செயலகத்தின் அரசிதழில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில், ‘தீர்ப்பு வழங்கிய நாள் முதல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் கேதார் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவர் வெற்றி பெற்ற சாயனேர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுனில் கேதார் நாசிக் மாவட்டத்திலுள்ள சாயனேர் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மிகப்பெரிய பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.