நெல்லை மாவட்டத்தில் அதீத கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் சுழற்சி காரணமாக இப்பகுதியில் கடும் மழை பெய்தது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், வரலாறு காணாத அதீத கனமழை பெய்தது.
அதாவது, கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மழை நீரில் தத்தளித்தது.
இதனையடுத்து, இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பலரையும் மீட்டன.
இந்த ஆதீத கனமழையால், மனிதர்கள் பலரும் பலியாகியுள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்டவையும் உயிரிழந்துள்ளன. ஏராளமான பொருட்களும் நாசம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இதனிடையே, நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
குறிப்பாக, 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,392 கோழிகள் உயிரிந்துள்ளன என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.