மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான ‘மெட் டெக் மித்ர’-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
மெட் டெக் மித்ர என்பது நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் ஆராய்ச்சி, அறிவு, போன்றவற்றுக்கு சிறந்த வடிவம் கொடுத்து அங்கீகரிக்கும் ஒரு தளமாகும்.
இந்த நிலையில், மெட் டெக் மித்ர என்ற முன்முயற்சியை இன்று காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறை இந்திய சுகாதாரத் துறையின் இன்றியமையாத, ஒருங்கிணைந்த அங்கமாகும்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கிற்கு ஏற்ப, 2047-ம் ஆண்டிற்குள் நாட்டின் சுகாதாரச் சூழலை மிகச் சிறப்பாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்பத் துறை 80 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
மருத்துவ சாதனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிப்பதற்காக, மருத்துவ தொழில் பூங்காக்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கொள்கை, மருத்துவத் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் இந்தத் துறை வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இவை இந்தத் துறையின் இறக்குமதி சார்புநிலையை கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும். 2030-ம் ஆண்டில் பாரதத்தில் இந்தத் தொழில்துறை 50 பில்லியன் டாலர் தொழில்துறையாக வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சிலின் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால் மற்றும் ஐ.சி.எம்.ஆர்-ன் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.