நைஜீரியாவில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் பிளாட்டோ மாநிலத்தில் உள்ள முசு கிராமத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் (முஸ்லீம்கள்), விவசாயிகளுக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில், முசு கிராமத்தில் சனிக்கிழமை நள்ளிரவு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் பலர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு மாநில கவர்னர் காலேப் முட்டாஃப்வாங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொடூரமான செயல். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறினார்.
இதற்கிடையே, கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர்.