புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த புதன்கிழமை பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ரஜோரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் இந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 4 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில இராணுவ விரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையும் இணைந்து கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.