ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் 11 திமுக அமைச்சர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், இவை எல்லாம் யார் அப்பா வீட்டு பணம் என்று உதயநிதி சொல்வாரா? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பாபநாசம் மண்ணில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நெற்களஞ்சியமான நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாலைவனநாதர் கோவிலில் அமைந்திருக்கும் நெற்களஞ்சியம், அமைந்திருக்கும் தொகுதி.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உலக மாநாட்டில், பாரத மண்டபம் முன்னர் 18,000 கிலோ எடையுடைய உலகிலேயே உயரமான நடராஜர் சிலை வைக்கப்பட்டது. அந்த நடராஜர் சிலை, சுவாமி மலையில்தான் உருவாக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த இரண்டாவது காசித் தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் 10 இந்திய மொழிகளிலும், 5 வெளிநாட்டு மொழிகளிலும், பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெற பிரெய்லி மொழியிலும் திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார் நமது பாரத பிரதமர் மோடி. தொல்காப்பியம், புறநானூறு, மணிமேகலை உட்பட 45 தமிழ் இலக்கண, இலக்கிய, சங்க இலக்கிய நூல்களை பிரெய்லி மொழியில் வெளியிட்டுள்ளார்.
உலக அளவில், தமிழ் மொழியையும், தமிழர் திறமையையும், பாரம்பரியத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்து சென்றிருக்கிறார். ஏழைகளுக்காகவும், மகளிருக்காகவும், இளைஞர்களுக்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடையவர் நமது பிரதமர்.
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு, தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கப் போராடுவது, திமுக கட்சிக்காரர்களையே மிஞ்சும் அளவுக்கு, சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுவது என்பதே முக்கிய வேலையாக இருக்கிறது.
இவர் மேல், வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒன்றரை கோடி பணம், சட்டவிரோதமாகப் பெற்றதாக, வழக்கு இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களில் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்.
தமிழக மக்களின் வரிப்பணத்தை, ஏழை எளிய மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட நிதியைச் சுரண்டி, திருடி ஊழல் செய்ததால், தமிழக அமைச்சர்கள் வரிசையாகச் சிறைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. பேரிடர் நிதியாக, மத்திய அரசு தமிழக அரசுக்கு இந்த ஆண்டு 900 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
சென்ற ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நிதியில், 813 கோடி ரூபாய் செலவிடாமல் வைப்பு நிதியாக தமிழகத்திடம் இருந்தது. மொத்தம் மத்திய அரசு கொடுத்த பணம் 1713 கோடி ரூபாய் தமிழக அரசிடம் இருந்தது. மழை நிற்பதற்கு முன்பே மத்தியக் குழு ஆய்வு செய்ய வந்துவிட்டனர். தமிழக அரசு மழைக் காலத்தில், முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்து கொண்டு, யார் அப்பன் வீட்டு பணம் என்று கோபாலபுரத்து இளவரசர் கேட்கிறார்.
முதலமைச்சர் மகனும் மருமகனும், ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்தது, வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி, சிறையில் இருக்கும் ஊழல் பாலாஜி, ஊழல் செய்த ரூ. 42 கோடி பணம், வைப்பு நிதியில் வைத்திருக்கும் பொன்முடி, ஒரே ஆண்டில் 4600 கோடி ரூபாய் மணல் கொள்ளை, போக்குவரத்துத் துறையில் வருடம் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர் சிவசங்கர், ஜெகத்ரட்சகனிடம் பிடிபட்ட 1200 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் 11 திமுக அமைச்சர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், இவை எல்லாம் யார் அப்பா வீட்டு பணம் என்று உதயநிதி சொல்வாரா? பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, மக்களின் பேரன்பைப் பெற்ற ஐயா கருப்பையா மூப்பனார் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் வழியில், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் தலைவராக விளங்கியவர். முதன்முதலாக வேட்டி கட்டிய தமிழர் மூப்பனார் அவர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பை, சூழ்ச்சிகள் பல செய்து தடுத்தவர் கருணாநிதி. இதுதான் இவர்கள் நிலைப்பாடு.
தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு3300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
53,577 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,81,295 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,46,421 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,55,312 பேருக்கு, பிரதமரின் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு திட்டம் 1,19,233 விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு, வருடம் 6000 ரூபாய், 5208 கோடி ரூபாய் முத்ரா கடன் என, மத்திய அரசு வழங்கிய நலத் திட்டங்கள் ஏராளம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.