இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் தொடர் இன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த முதலாவது டெஸ்ட் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றே அழைக்கப்படுகிறது. 31 ஆண்டுகளாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
அந்தக் குறையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நீக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் பலம் மிகுந்தவர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி எளிதாகும்.
அதைப் போலவே பவுலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். இவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினாள் இந்திய அணி இம்முறை கோப்பையை வென்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது.