ஹிந்தியை கற்றுக்கொள்ளும்படி பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது வாஜ்பாயை புகழ்ந்து பேசியிருப்பது “இண்டி” கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, 28 மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கூட்டணியின் முதல் கூட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகார் மாநிலத்தில் நடந்தது.
இதன் பிறகு பெங்களூரு, மும்பை, டெல்லி என கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஆனால், இக்கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிதீஷ் குமார் கூட்டணி அமைந்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார்.
அதேபோல, நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலின்போது மத்தியப் பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வதாக, கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
மேலும், சனாதன விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உட்பட கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் கருத்துத் தெரிவித்தன. தவிர, பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அறிவித்ததும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு, சமீபத்தில் டெல்லியில் நடந்த “இண்டி” கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியில் பேசியதை தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி கூறியதால், ஹிந்தி கற்றுக்கொள்ளும்படி நிதீஷ் குமார் கூறியது சர்ச்சையே ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் குறித்து நிதீஷ் குமார் புகழ்ந்து பேசியிருப்பது “இண்டி” கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவரது ஆட்சி காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அவர் எனக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்.
பீகார் முதல்வராக நான் பொறுப்பேற்றதில் வாஜ்பாயிக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், வாஜ்பாய் பாரபட்சமின்றி ஆட்சி செய்தார். என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. வாஜ்பாயின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
உடனே நிருபர்கள், “அப்படி என்றால் அரசியலில் வாஜ்பாயின் கொள்கையை ஏற்கிறார்களா” என் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதீஷ் குமார், “வாஜ்பாய் மிகச் சிறந்த நிர்வாகி. அவர் ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளன. அவருடன் நானும் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன்” என்று நேரடியாக பதில் கூறாமல், மழுப்பலாகக் கூறினார்.