மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அமையும் என்று சி வோட்டர் மற்றும் ஏ.பி.பி. நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், பா.ஜ.க. 282 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. அப்போது, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றார்.
அதேபோல, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடியே மீண்டும் தொடர்கிறார். இந்த சூழலில், 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார். இத்தேர்தலில், இன்னும் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
அதேசமயம், தேர்தலில் பா.ஜ..க.வை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ் கட்சி தலைமையில் 28 மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” கூட்டணி என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. எனினும், மக்களவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. இதற்கு வலு சேர்ப்பதுபோல நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி இருக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பு, கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள். 543 மக்களவைத் தொகுதிகளிலும் 13,115 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கருத்துக் கணிப்பில்தான், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இண்டி கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், தென் இந்தியாவிலும், பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துக் கணிப்பு விவரம்: கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 தொகுதிகளில் 80 முதல் 90 இடங்களை பா.ஜ.க. கைப்பற்ற வாய்ப்புள்ளது. வடக்கு மண்டலத்தில் உள்ள 180 தொகுதிகளில் 150 முதல் 180 இடங்களையும், மேற்கு மண்டலத்தில் உள்ள 78 தொகுதிகளில் 45 முதல் 55 இடங்களையும், தெற்கு மண்டலத்தில் உள்ள 132 தொகுதிகளில் 20 முதல் 30 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, மாநில வாரியாக மத்திய பிரதேசத்தில் (27-29), சத்தீஸ்கரில் (9-11), ராஜஸ்தானில் (23-25), உத்தரப் பிரதேசத்தில் (73-75) தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் பா.ஜ.க.வின் கை ஓங்க வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. 16 முதல் 18 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும், பிரதமர் மோடியின் பணி திருப்திகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தவிர, 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்றும், 21.3 சதவீதம் பேர் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை “இண்டி” கூட்டணி ஒருங்கிணைந்து செல்லாது என்று ஏராளமானோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.