சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 19-வது ஆண்டு நினைவு தினமான இன்று தமிழக கடற்கரை பகுதிகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக மீனவர்களும், பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடியது. திடீரென தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் நிலைகுலைந்துபோன மக்களுக்கு, என்னவோ உலகமே அழிகிறதோ என்று எண்ணும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் வசித்த மக்களை வாரி சுருட்டி சென்றது. இந்த எதிர்பாராத இயற்கை பேரிடரில் மொத்தம் 2 இலட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள். இதில், தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அன்று குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் கடற்கரையோரம் ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 19-வது சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.