அயோத்தி இராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டடக் கலையில் கட்டப்படுகிறது. இக்கோவில் 2,500 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும் என்று அயோத்தி கோவிலின் கட்டட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் தெரிவித்திருக்கிறார்.
அயோத்தியிலுள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தி கோவிலின் கட்டட வடிவமைப்பை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 80 வயதான சந்திரகாந்த் சோமபுரா என்பவர் செய்திருக்கிறார். இக்கோவில் கட்டுமானப் பணிகள், சந்திரகாந்த் சோமபுராவின் மகன்கள் நிகில், ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில்தான் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தொழிலதிபர் பிர்லாதான், அப்போதைய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலிடம் என்னை பரிந்துரை செய்தார். இராமஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். பிறகு, என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
அப்போது, அங்கு இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் கட்டட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்தப் பொருட்களையும் என்னால் எடுத்து வர முடியவில்லை. எனவே, நான் நடந்தே அளவெடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, வீட்டிற்குத் திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன்.
இதனை அடிப்படையாகக் கொண்டு மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். இதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கோவில்கள் என்பது வெறும் கட்டடக் கலை மட்டுமல்ல. கோவிலுக்குச் சென்றால் அது நமக்கு ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்போல், அயோத்தி இராமர் கோவிலும் பக்தர்களுக்கு மன நிம்மதியைத் தரும்.
அயோத்தி கோவில் பழங்கால முறைப்படி, அதேசமயம், நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், சனாதன முறைப்படி, நாகரா கட்டடக் கலையில் கட்டப்படுகிறது. இக்கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இக்கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும்.
அதேபோல, கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. ஆகவே, இக்கோவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்திருக்கும். இதை தற்போதுள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நிலநடுக்கம், வெள்ளம், மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது.
மேலும், பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5,000-க்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வெறும் இராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளன. இக்கோவில் சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58,000 சதுரடியில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. இதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்” என்றார்.