சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க வீரராகக் களமிறங்கிய டேவிட் வார்னர் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இப்போட்டியில் டேவிட் வார்னர் இரண்டு ரன்களில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். இதைப் பயன்படுத்தி அவர் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
முதல் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகின் ஆப்ரிடி பந்துவீச்சில் எளிதான ஒரு கேட்சை கொடுத்தார். ஆனால் அதை ஸ்லிப்பில் நின்ற பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் தவற விட்டார். இது பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.
இதனை அடுத்து டேவிட் வார்னர் 83 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டேவிட் வார்னர் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு ஸ்டீவ் வாக் அந்த இடத்திலிருந்த நிலையில் தற்போது டேவிட் வார்னர் அதனை முறியடித்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார்.
667 இன்னிங்ஸில் விளையாடி 27,368 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், டேவிட் வார்னர் 480 இன்னிங்சில் விளையாடி 18502 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் ஸ்டீவ் வாக் 548 இன்னிங்சிக் 18,496 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.