கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே வீட்டின் டி.வி. ஸ்டேன்டின் பின்புறம் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர்.
அழகியமண்டபம் அடுத்த பிலாந்தோப்பை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவர் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு ஒன்று, வீட்டில் இருந்த டி.வி. ஸ்டேன்டின் உள்ளே சென்று பதுங்கிக்கொண்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், பதறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், டி.வி. ஸ்டேன்டில் பதுங்கியிருந்த பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த பாம்பு வெளியே வராமல் தலையை மட்டும் நீட்டியபடி தீயணைப்பு வீரர்களை பார்த்து சீறி உள்ளே சென்று விட்டது.
எவ்வுளவோ முயற்சித்த போதும் பாம்பு பிடிபடாமல் இருந்தது. இதனையடுத்து அந்த பெரிய டி.வி. ஸ்டோன்டை தூக்கி பார்த்த போது ஸ்டேன்டின் அடியில் இருந்த டி.வி.கேபிள் ஒயர்களில் பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஒயரில் சிக்கியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்தனர்.
பின்னர் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உதயகிரி கோட்டையிலுள்ள வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர.