திமுக ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலை கொடுப்போம் என்று சொல்லிவிட்டு, கடந்த முப்பது மாதங்களில், இருபதாயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கொடுக்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருவாரூர் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சங்கீத மும்மூர்த்திகள் ஆன சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் மூவருமே திருவாரூர்க்காரர்கள் தான். ஆதிகோவில் என்றழைக்கப்பட்ட திருவாரூர் தியாகராஜர் கோவில், 9 இராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 365 சிவலிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள்கோயில்கள் எனப் பிரம்மாண்டமாக விளங்குகிறது.
இந்த ஊரில் பிறந்த கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுகிறார். தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் திருவாரூர் மாவட்டத்தின் பங்கு வெறும் 0.86% மதிப்புடன், 34 ஆவது இடத்தில் உள்ளது. தொழிற்சாலைகள் இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
திருவாரூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, தனது சொந்த ஊரையே முன்னேற்றவில்லை. திருவாரூர் மாவட்டத்தை முன்னேற்ற முயற்சித்ததில்லை. ஆனால், திராவிட மாடல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, கடவுளைக் குறித்தும், இந்து மதத்தைக் குறித்தும் அவதூறாகப் பேசிய கலைஞர் கருணாநிதி பெயர் வைக்க நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து, பாஜக பெரும் போராட்டம் நடத்தி, அந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறச் செய்தார்கள்.
இதே திருவாரூரில் குன்னலூர் ஊராட்சியில் எக்கல் தேவர்புரம் கிராமத்தில் சாலை வசதிகளே இல்லை. 30 வருடங்களாக சாலை வசதிகள் இல்லாத ஊர். கருணாநிதி திருவாரூரில் பிறந்து இந்த ஊருக்கு என்ன பயன்? இந்த ஊருக்குச் சாலை வசதி அமைத்துக் கொடுத்து, அந்த சாலைக்கு கருணாநிதி பெயர் வைத்தால், பாஜக எதிர்க்காது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனின் அண்ணன் பூண்டி கலைச்செல்வன் அன்று ஸ்டாலினுக்கு சாரட் வண்டி ஓட்டினார். அவர் தம்பி கலைவாணன் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இன்று சாரட் ஓட்டுகிறார்.
ஒரு குடும்பத்துக்கு சாரட் ஓட்டுவதற்காக என்றே ஒரு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவாரூர் கடைவீதி காய்கறிச் சந்தையில் 20 ஆண்டுகளாக உள்ள 285 சிறிய கடைகளை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், மாற்று இடங்கள் வழங்காமல் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று காலி செய்ய, பூண்டி கலைவாணன் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
6 மாதங்களில் புது கட்டிடம் கட்டி, தற்போதுள்ள 285 கடை உரிமைதாரர்களுக்கு கண்டிப்பாக கடை வழங்குவோம் என்று கலைவாணன் உத்தரவாதம் கொடுத்துள்ளார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை. இதில், இவர்கள் வாய்வார்த்தையாக சொல்வதை நம்பி, 2000 பொதுமக்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டுமா?
திருவாரூர் மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான அரசு இசைக் கல்லூரி, புறவழிச் சாலைகள், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடைக் காலங்களில் வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக அரசே வேளாண்துறையின் மூலம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள், இங்குள்ள 11 ஏரிகளை முழுமையாகத் தூர்வாரி ஒன்றோடொன்று இணைக்கப்படும் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, முதலமைச்சர் டெல்லியில் இந்தி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலை கொடுப்போம் என்று சொல்லிவிட்டு, கடந்த முப்பது மாதங்களில், இருபதாயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கொடுக்கவில்லை. அரசுப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாமல் வேண்டுமென்றே காலதாமதமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்பை வழங்கியுள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். மக்கள் விரோத திமுக கூட்டணியைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்தார்.