சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைப்பெற்றது.
கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு பெறுகிறது.
மண்டல பூஜை நாளில் ஐயப்ப சுவாமி விக்ரகத்தில் அணிவிப்பதற்காக மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 450 பவுன் எடையில் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.
ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ள, இந்த தங்க அங்கி டிசம்பர் 23-ல் பவனியாகப் புறப்பட்டது. பல்வேறு பகுதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் நேற்று மதியம் பம்பை வந்தடைந்தது. பின்னர் நேற்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து மேளதாளுடன் பெரிய நடைப்பந்தல் வழியாக 18 படி ஏறி கோவில் முன் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஐயப்பன் கோவில் முன் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்று நடை அடைத்த பின்னர் அந்த அங்கியை ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் மண்டல பூஜை நடைபெற்றது. கலசாபிஷேகம் முடிந்து களபாபிஷேகம் நடத்திய பின் ஐயப்பன் விக்கிரகத்தில் தங்க அங்கி மீண்டும் அணிவிக்கப்படும். பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
தொடர்ந்து வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது. டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.