ஸ்பெயினில் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய வீரர்களின் பொருட்களை மர்ம கும்பல் திருடியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 6 செஸ் வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்திய செஸ் வீரர்களுக்காக தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வீரர்களுடைய லேப்டாப் மற்றும் ஏர் பாட் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை திருடி இருக்கிறார்கள்.
மேலும் துஷ்யன் என்ற வீரரின் பாஸ்போர்ட்டும் திருட்டுப் போய் இருக்கிறது. இதனால் இந்த தொடரில் அவர் பங்கேற்க முடியாமல் இந்திய தூதரகத்திற்கு, புகார் அளிக்க சென்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செஸ் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் இது போன்ற ஒரு சம்பவத்தை சந்தித்ததே இல்லை என்றும், போதிய ஏற்பாடையும் செய்யாமல் எங்களை விட்டு விட்டார்கள் என்றும் எங்களுடைய பொருட்கள் திருடி போனது குறித்து போலீசாரிடம் கேட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தாங்கள் இருக்கும் இடத்தில் நிறைய திருடர்கள் இருப்பதால் அங்கே வந்து சோதனை செய்வதற்கு கூட போலீசார் பயந்ததாகவும் செஸ் வீரர்கள் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.
தற்போது இந்த சம்பவம் குறித்து போட்டியை நடத்திய செஸ் அமைப்பு இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.