செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்த ஏவிய டிரோன் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்காவின் F-18 போர் விமானம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
தவிர, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதல் 80 நாட்களைக் கடந்து இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரத்தின் பெரும்பகுதி உருக்குலைந்து கிடக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டி இருக்கிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையோ 40,000-க்கும் மேல். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், சுரங்கப் பாதைகள், முக்கியத் தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போரை நிறுத்த உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.வும் தீர்மானம் நிறைவேற்றிப் பார்த்தது. ஆனால், யார் சொல்வதையும் கேட்க இஸ்ரேல் தயாராக இல்லை. ஹமாஸ் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கும்வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே, செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை நிலை நிறுத்தி இருக்கிறது.
இந்த சூழலில், செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இவற்றை அமெரிக்க இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இதையடுத்து, அமெரிக்க இராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், 10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், 3 கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2 தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.