தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேஎல் ராகுலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி வந்தார்.
இறுதியாக இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 14 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என 101 ரன்களை எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
107 ரன்களுக்கு இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை எதிர்கொண்ட விதம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பலரும் கேஎல் ராகுலின் டெஸ்ட் கிரிக்கெட் கரியரில், மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இவரின் சிறப்பான ஆட்டத்தை கண்ட இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ” கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரின் தெளிவான சிந்தனை தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. கே.எல். ராகுலின் ஃபூட் வொர்க் துல்லியமாக இருந்தது. இப்படி செயல்பட வேண்டுமென்றால், சிந்தனையில் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும். இந்த போட்டியின் முக்கியமான சூழலில் சதம் விளாசப்பட்டுள்ளது.
Well played @klrahul. What impressed me was his clarity of thought. His footwork looked precise and assured, and that happens when a batter is thinking right. This century is crucial in the context of this Test. India would be happy with 245 considering where they were at one… pic.twitter.com/Dtw9HpjAIC
— Sachin Tendulkar (@sachin_rt) December 27, 2023
இந்திய அணியின் நேற்றைய சூழலை கருத்தில் கொண்டால், 245 ரன்கள் எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கும். பர்கர் மற்றும் கோட்சியே இருவரும் தென்னாப்பிரிக்கா பவுலிங் லைன் அப்பில் சிறந்த வீரர்களாக தெரிகிறார்கள்.
ஆடுகளத்தை வைத்து பார்க்கும் போது தென்னாப்பிரிக்கா அணியின் பவுலிங் அந்த அணிக்கு மகிழ்ச்சியை அளிக்காது ” என்று பதிவிட்டுள்ளார்.