டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சியில் கலவையான முடிவுகள் நிலவி வருவதால், அதிகமான பயனாளிகளை ஈர்க்கும் வகையில், இந்திய நிதி அமைச்சகம் RuPay டெபிட் கார்டுகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறையான BHIM-UPI மூலம் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகைகளை மூன்றாவது ஆண்டாக நீட்டிக்க திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவில் நகரங்களில் மட்டுமின்றி பெரும்பாலான கிராமங்களிலும், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பைவிட குறைந்து விட்டது.
RuPay டெபிட் கார்டுகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறையான BHIM-UPI சேவைகளை ஊக்குவிப்பதற்காக, 2022-23ம் நிதியாண்டில் 26 பில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை 2023-24ல் இரட்டிப்பாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 50 பில்லியன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், RuPay கார்டுகளை பயன்படுத்தி குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளுக்கு, விற்பனை நிலையத்திலோ அல்லது இ-காமர்ஸ் நிறுவனத்திலோ 0.4 சதவீதத்தை ஊக்கத்தொகையாக கிடைக்கும்.
காப்பீடு, அரசு, கல்வி, இரயில்வே, விவசாயம், எரிபொருள், நகைகள், மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் வணிகம், தனிநபர் சேவைகள் ஆகியவற்றில் RuPay கார்டுகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய, ஊக்கத்தொகை 0.15 சதவீதமாக இருக்கும்.
2021-22 நிதியாண்டில், 14.5 பில்லியன் செலவில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது 2023-24ல் செலவின நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.