நாட்டின் அதிவேக சொகுசு இரயில் என்ற பெருமை வந்தே பாரத் இரயிலுக்கு கிடைத்ததுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் இரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 -ம் ஆண்டு பிப்.15-ம் தேதி டெல்லி – வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை சென்னை – மைசூரு, சென்னை – கோயம்புத்தூர், சென்னை – திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வந்தன.
இதனிடையே, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இரு பெரும் நகரங்களில் ஏராளமான தொழில்களும், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதால், அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய உள்ளது.
இதனால், இந்த இரு பெரும் நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30 -ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
அதாவது, கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரையிலான இரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 4 -வது வந்தே பாரத் இரயில் கிடைத்துள்ளது.
8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில், கோவை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டும். இந்த இரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து கோவை திரும்புகிறது. வரும் 30 -ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை தொடங்க உள்ளது.
இந்த இரயில் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளார்.
கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். இதில், சாதாரண சேர் காரில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1000மும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட்டில் பணம் செய்ய குறைந்தபட்சம் 1850 ரூபாயாவும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.