தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ” விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.