தமிழ் திரையுலகில் இருந்து என்றும் அழிக்க முடியாத ஒரு பெயர் விஜயகாந்த். தன்னை வளர்த்து விட்ட சினிமாவிற்காக பல நன்மைகளை செய்தவர். நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று அனைத்து கடனையும் அடைந்தவர்.
‘உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை’ என்னும் வாக்கியத்திற்கேற்ப பசியால் வடியவர்களுக்கு உணவிட்டு இன்று அனைவரையும் வாட வைத்துக் கொண்டுள்ளார். என்றும் மக்களின் மனதில் நீக்க இடம்பிடித்திருக்கும் இந்த மாமனிதனைப் பற்றி தெரியாத சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. விஜயகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று நூறு சதவீதம் சொல்லலாம். ஏனென்றால், தன்னுடைய படப்பிடிப்பில் தான் என்ன உணவு சாப்பிட்டாலும், அதே உணவு தான் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டியவர் கேப்டன்.
2. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு அள்ளி கொடுப்பாராம் விஜயகாந்த். ஆனால், படப்பிடிப்பில் சிலர் அவரிடம் எப்படி உதவி கேட்பது என்று நினைத்துக்கொண்டு தயங்கி நிற்பார்கள். அவர்களை அழைத்து அவர்களுடன் ஒன்றாக சீட்டாடி தோற்றுப்போவதுபோல் நடித்து அவர்களே காசை சம்பாதித்ததுபோல் செய்வாராம் விஜயகாந்த்.
3. இன்று தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய ஏணியாக இருந்துள்ளார் விஜயகாந்த். ஆம், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படம் படுதோல்வியடைந்தது.
இதனால், அடுத்த படத்தில் ஒரு பெரிய நடிகருடன் தான் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும், அப்போது தான் விஜய்க்கு நல்ல பிரபலம் கிடைக்கும் என்று எண்ணி இரு மாபெரும் நடிகர்களிடம் படத்தில் நடிக்க கேட்டுள்ளாராம் சந்திரசேகர். ஆனால், அவர்கள் அதனை மறுத்துவிட்டார்கள்.
அதன்பின் விஜயகாந்த்திடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக அப்படத்தில் கதை கூட கேட்காமல் எஸ்.ஏ. சந்திரசேகருக்காக ஒப்புக்கொண்டாராம் விஜயகாந்த். அன்றைய காலகட்டத்தில் விஜய்க்கு ஒரு நல்ல பிரபலம் உண்டாக முக்கிய காரணமாக அமைந்தது விஜயகாந்த் மட்டுமே.
4. மதுரையில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காக தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் அனைவரும் ரயிலில் பயணித்துள்ளார்கள். அப்போது யாருக்கும் உணவு ரயிலில் இல்லை என்று விஜயகாந்திற்கு தெரியவருகிறது. உடனடியாக நடு ராத்திரியில் ரயிலை நிறுத்தி, அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து அனைவரையும் சாப்பிட வைத்துள்ளாராம் விஜயகாந்த். இதை நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. காஸ்ட்டியூம் டிசைனர் ஒருவர் தங்களுடைய யூனியன் கட்டடத்தை கட்ட ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது என்று விஜயகாந்திடம் உதவி கேட்டுள்ளாராம். இன்னும் இவ்வளவு தொகை தேவை என்று ஒரு கணக்கு புத்தகத்தை விஜயகாந்திடம் கொடுத்துள்ளாராம். சற்று நேரம் புத்தகத்தை பார்த்த விஜயகாந்த் அந்த பெரிய தொகையை நானே மொத்தமாக தருகிறேன், யாரிடமும் நீங்கள் போய் நிற்கவேண்டாம் என்று கூறினாராம்.
விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகளை பேசவேண்டும் என்றால், இந்த பதிவோ, அல்லது இன்று ஒரு நாளோ போதாது. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சினிமா துறைக்கும், சினிமா கலைஞர்களுக்கும் பல விஷயங்களை செய்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.