சினிமாவில் மட்டுமே நடிக்க அறிந்தவர், வாழ்வில் பொய்மையாகக்கூட நடிக்கத் தெரியாத உத்தமர் என்று நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு தருமபுர ஆதீனம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஆன்மீகம் கொண்ட அரசியல்வாதியும், நடிகருமான திரு. விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணம் சம்பவித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
அரசியலில் நேர்மையுமா, ஆன்மீகப் பணிவும், சமுதாயத்தின் மீது இரக்க சிந்தனையும், மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதியை, முன்னாள் எதிர்கட்சித் தலைவரை, சினிமாவில் மட்டுமே நடிக்க அறிந்தவரை, வாழ்வில் பொய்மையாகக்கூட நடிக்கத் தெரியாத உத்தமரை, ஆன்மீகத்தை வாழ்வில் இணைத்தே காரியம் இயற்றும் மாமனிதப் புனிதரை தமிழகம் இழந்து விட்டதே.
நாம் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய தந்தையாருடனான தொடர்பும், அதுபோக விஜயகாந்துடனான தொடர்பும், சமீபத்தில் நம்மை சந்தித்து ஆசிபெற்ற திருமதி பிரேமலதா வரை குடும்பமே நம்மோடு தொடர்புடையது. நம் ஆதீன பட்டிணப் பிரவேச பிரச்சனையின்போது முதலாவதாக அறிக்கை கொடுத்து பக்கபலமாக நிகழ்வுக்கு கட்சித் தொண்டர்களை அனுப்பி வைத்தவர்.
தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது. சமுதாயத்தின் இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது. ஆன்மீகம் அக்கறை உள்ளவரை தவிக்க விட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவிக்கிறோம். ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.