ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்தியின் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.
ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக வருமான வரி ஏய்ப்பு, நில மோசடி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதன் காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் பண்டாரி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். எனினும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் நில மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.
அதாவது, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஹெச்.எல்.பாஹ்வா என்பவரிடம் இருந்து, பிரியங்கா காந்தி கடந்த 2006 ஏப்ரல் மாதம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள அமிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்துடன் கூடிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலம் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கே விற்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, 2005 – 2006-ம் ஆண்டுகளில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் இதே அமிபூர் கிராமத்தில் ஹெச்.எல்.பாஹ்வாவிடமிருந்து 40.8 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நில ஒப்பந்தத்தை சி.சி. தம்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, சிசி தம்பியும் 2005 முதல் 2008 வரை அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார்.
இந்த சிசி தம்பியும், சுமித் சதாவும்தான் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு உதவி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், 486 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் நடந்த மோசடி காரணமாக சிசி தம்பி கைது செய்யப்பட்டார். பின்னர், 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து சிசி தம்பி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கெனவே பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை சேர்த்திருந்தது. இந்த சூழலில், பிரியங்கா காந்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
ஆக, நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வசமாக சிக்கி இருக்கிறார்கள்.