பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றம், அல் கொய்தாவின் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை குற்றவாளிகள் என்று அறிவித்து, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஹுசைன் என்கிற அக்தர் ஹுசைன் லஸ்கர். அதேபோல, மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் அலீம் மொண்டல் என்ற முகமது ஜூபா. இருவரும் தடை செய்யப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
மேலும், அஸ் கொய்தாவின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். தவிர, ஆப்கானிஸ்தானின் கொராசன் மாகாணத்திற்கு ஹிஜ்ரா மேற்கொள்ள சதி செய்திருக்கிறார்கள்.
அதோடு, இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஜிஹாத் நடத்தவும் திட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் தீவிரவாதத்தையும், வன்முறையையும் கட்டவிழ்த்துவிடும் வகையில், இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, மேற்கண்ட 2 பேர் மீதும் ஐ.பி.சி. பிரிவுகள் 153A, 153B, 120B, 121, 121A, 114 மற்றும் 511 மற்றும் UA சட்டத்தின் 10, 13, 15, 16, 18 & 20 (P) சட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அல் கொய்தா தீவிரவாதிகள் முகமது ஹூசைன், அப்துல் அலீம் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. மேலும், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முறையே 41,000 மற்றும் 51,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.