பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக விஜயகாந்த் உடல் நாளை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது என தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.
கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.