நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தருகிறார்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது.
விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வர இயலாத தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தீவுத்திடலில் இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது ரசிகர்களும், தொண்டர்களும் துக்கம் தாளாமல் கதறி அழுகின்றனர். இது காண்போர் மனதை கரைப்பதாக இருக்கிறது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் மதியம் 1 மணிவரை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, அவரது உடல் ஊர்வலமாக கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாலை 4.45 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.30 மணியளவில் வருகை தருகிறார்.