நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில்வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாவே உடல்நலம் குன்றிய நிலையில் இருந்து வந்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அவரது உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாவே தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் மோசமடையவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் சாலி கிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, விஜயகாந்த் மறைந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தக் குவிந்தனர்.
எனவே, அவரது உடல் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதன் பிறகு, கூட்டம் அதிகமாகக் கூடவே, விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.