ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், நேற்று காலை முதல் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகேயே அமர்ந்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அஞ்சலி செலுத்த வரும் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்து விட்டு, பின்னர் கிளம்பிச் சென்று விடுகிறார்கள். ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் மட்டும் நேற்று காலை முதல் தற்போது வரை விஜயகாந்த் உடல் வைக்கப்ட்டிருக்கும் இடத்துக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறார்.
ஆம்! விஜயகாந்த் மறைவுச் செய்தியை கேள்விப்பட்டதும், மன்சூர் அலிகான் நேராக சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர், அங்கேயே அமர்ந்திருந்தார்.
இதன் பிறகு, விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற அந்த வாகனத்தின் பின்னாலேயே மன்சூர் அலிகானும் நடந்தே சென்றார்.
மேலும், விஜயகாந்த் உடல் இரவு முழுவதும் கோயம்பேட்டிலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், மன்சூர் அலிகான் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் அங்கேயே இருந்தார். இதன் பிறகு, விஜயகாந்த் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போதும் மன்சூர் அலிகான் கூடவே சென்றார். தற்போது வரை மன்சூர் அலிகான் அங்குதான் இருக்கிறார். இன்று மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் அங்கேயே இருப்பார் என்கிறார்கள். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை மன்சூர் அலிகான் செலுத்துகிறார் என்கிறார்கள்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமாகி இருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு மன்சூர் அலிகானுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.