விஜயகாந்த் உடலுக்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், குஷ்பு, மன்சூர் அலிகான் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த சூழலில், விஜயகாந்த் உடலுக்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்த வந்தார்.
ஆனால், ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இக்கூட்டத்தில் சிக்கிக் கொண்ட விஜய் ஆண்டனி, பிறகு தடுப்புகளில் ஏறிக் குதித்து வந்தார். பின்னர், விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார்.
அனைவரும் மாலை அணிவித்து, தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்திய நிலையில், விஜய் ஆண்டனி முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.