விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது.
அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை என அத்தனை வார்த்தைகளுக்கும் சேர்த்து ஒரே மனிதரை சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்தைத்தான் சொல்ல வேண்டும்.
எந்தளவு பணிவு இருந்ததோ, அந்த அளவு நியாயமான கோபமும் கொண்டவர். அதற்கு ரசிகன் நான். அதனால்தான் அரசியலுக்கு வந்தார் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு ஒரு இழப்பு தான்” என்றார்.