மெக்ஸிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின் சோனோரா மாகாணத்தில் சிடெட் ஒபெகன் என்கிற நகரம் உள்ளது. இந்நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.
பலியானவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அதேபோல, காயமடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள். மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவில், கடந்த 17-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். தவிர, கடந்த 2006-ம் ஆண்டு முதல் இதுவரை 4.20 லட்சம் பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.