2023 ஆம் மறைந்த முக்கிய தலைவர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜனவரி 8: மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் கேசரி நாத் திரிபாதி உடல்நலக்குறைவால் தனது 88-வது வயதில் காலமானார். பாஜக மூத்த தலைவரான அவர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி 14 : பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் தமது 76ஆம் வயதில் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற அவர், பல்லூர் அருகே சென்ற போது மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஜனவரி 12 : முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் தமது 75ஆவது வயதில் காலமானார்.பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். 2017ஆம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி 29 : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். அவருக்கு வயது 69.ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜ்ராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, காரில் இருந்து இறங்கியஅவரை, போலீசார் ஒருவர் சுட்டுக்கொன்றார்.
ஜனவரி 31 : முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் தனது 97-வது வயதில் காலமானார்.உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய சாந்தி பூஷண் காங்கிரஸ் கட்சியிலும், ஜனதா கட்சியிலும் தீவிர உறுப்பினராக இருந்தார். கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக அவர் பணியாற்றினார்.
ஏப்ரல் 6 : ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜெகநாத் மஹ்தோ நுரையீரல் நோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
ஏப்ரல் 25 : பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் காலமானார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.
ஜூலை 18 : கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனது 79-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1970-ஆம் ஆண்டு புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பிறகு அதே தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 4 முறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
செப்டம்பர் 28 : வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் 98வது வயதில் காலமானார். பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு என கூறிய அவர், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலையை மாற்றி, வேளாண் உற்பத்தி பொருட்களை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
வணிகம் மற்றும் பிற துறைகள்:
ஏப்ரல் 12 : மஹிந்திரா குழும முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா தமது 99-ஆவது வயதில் காலமானார். இந்தியாவின் அதிக வயதான கோடீஸ்வரர் என அறியப்பட்ட அவரின் மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்.ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 7 : பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அம்பரீஷ் மூர்த்தி (51) மாரடைப்பால் லடாக்கில் உள்ள லே நகரில் காலமானார். பெப்பர்ஃப்ரை நிறுவனம் ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.
செப்டம்பர் 6 : பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார். 1987 பேட்ச் கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அருண் குமார் சின்ஹா, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
நவம்பர் 14 : சஹாரா இந்தியா நிறுவனர் சுப்ரதா ராய், 75வது வயதில் காலமானார்.