புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் நள்ளிரவில் சிமெண்ட் லாரி மோதி பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக அய்யப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு எதிரே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் சாலையில் நின்றிக்கொண்டும் இரண்டு வேன் மற்றும் காரில் இருந்த படியும் தேனீர் அருந்தியுள்ளனர்.
அப்போது, அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியானது கட்டுப்பாட்டை மீறி 3 வாகனங்கள் மீது மோதிவிட்டு, டீக்கடைக்குள் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினம் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், லாரிக்கு அடியில் சிக்கிய 5 பேர் சடலங்களை நீண்ட நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.