தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இதுவரை நேரடியாக பிரதமரின் பரிந்துரையின்படி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த சூழலில், நாட்டில் நியாயமான தேர்தலை உறுதி செய்யும் விதமாக, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் கொலீஜியம் போன்ற அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவினர் நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவரை நியமித்து “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023” என்ற புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் டிசம்பர் 12-ம் தேதியும், மக்களவையில் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதன் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சட்ட அமைச்சர் தலைமையில், 2 செயலாளர்கள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும். இக்குழு தகுதி வாய்ந்த 5 பேரின் பெயர்களை பரிந்துரை செய்யும். இவர்களில் தகுதியான நபர்களை, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக பிரதமர் தலைமையிலான குழு நியமிக்கும்.