கடந்த 2023ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் மறைந்த முக்கிய தலைவர்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஷேக் நவாப் அல் அஹ்மத்
குவைத் நாட்டின் மன்னரான ஷேக் நவாப் அல் அஹ்மத் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி காலமானார். 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி பிறந்த அவர், தனது முன்னோடியான ஷேக் சபாவின் மரணத்திற்குப் பிறகு 2020 இல் அமீராகப் பொறுப்பேற்றார். நாட்டின் உள் பூசல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினார். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த முன்னாள் அமீர் குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். 1990 ஈராக்-குவைத் போரின் போது அவரது முடிவுகளுக்காக பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஹென்றி கிஸ்ஸிங்கர்
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது 100வது வயதில் காலமானார். பதற்றம் நிறைந்த பனிப்போரின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றியதால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் ஹென்றி கிஸ்ஸிங்கரின் முக்கிய பங்காற்றினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவர், இரண்டு அமெரிக்க அதிபர்கள் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்டு ஆகியோரின் கீழ் பணியாற்றிய அனுபவம் உண்டு. இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே 1973 யோம் கிப்பூர் போரின் முடிவை பேச்சுவார்த்தை நடத்த கிஸ்ஸிங்கர் உதவினார்.
ரோசலின் கார்ட்டர்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் மனைவி ரோசலின் கார்ட்டர் 96-வது வயதில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். 1927 இல் பிறந்த ரோசலின் 1946 இல் ஜிம்மி கார்டரை மணந்தார். ஜிம்மி கார்டரின் அதிபரானபோது அவரது நெருங்கிய ஆலோசகரானார். அமைச்சரவைக் கூட்டங்களில் அமர்ந்த அவர், சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி பேசினார்.
எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட தனியார் இராணுவத்தின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் உயிரிழந்தார். ப்ரிகோஜின் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், அதிபர் பதவியில் இருந்து புடினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுவரை உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு துணை நின்ற பிரிகோஜின், திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யாவின் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதுபோல் தோன்றியது. ஆனால் அவர் சட்டப் போராட்டம் நடத்துவதாகவும், அரசைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கம் இல்லை என்றும் தெரியவந்ததால், ரஷ்ய அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இந்நிலையில் அவர் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
லி கெகியாங்
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்(68) அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவர் சுமார் பத்து ஆண்டுகள் சீன பிரதமராக பணியாற்றியுள்ளார். அவர் பிரதமர் பொறுப்பில் இருந்து விடைபெறும் போது அரசு அதிகாரிகளிடம் “மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சொர்க்கம் பார்க்கிறது. வானமே அவருடைய கண்கள் என்று கூறினார்.நாட்டிற்கு பங்களிக்கும் லட்சியத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த லீ, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ள பொலிட்பீரோ நிலைக்குழுவில் இருந்து கடந்த அக்டோபரில் வெளியேறிய ஒரு வருடத்திற்குள் மாரடைப்பால் காலமானார்.
பர்வேஸ் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் 79-ஆவது வயதில் மரணமடைந்தார். நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி முஷாரப் உயிரிழந்தார். 1999ஆம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவர் கவிழ்த்தார். பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார். முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது.
சில்வியோ பெர்லுஸ்கோனி
இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (86)உடல்நலக்குறைவால் ஜூன் மாதம் காலமானார். இத்தாலி பிரதமராக சில்வியோ இருந்தபோது இங்கு அகதிகளுக்கு இடமில்லை. ஆனால், அழகிய பெண்கள் வரலாம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தாலி அரசியலில் கிங் மேக்கராக சில்வியோ பெர்லுஸ்கோனி கருதப்பட்டார்.
சார்லி முங்கர்
முதலீட்டு உலகின் ஜாம்பவானும், வாரன் பஃபெட்டின் கூட்டாளியுமான சார்லி மங்கர் (99) நவம்பர் மாதம் காலமானார். வாரன் பஃபெட்டின் நீண்டநாள் தொழில் பார்ட்னராகவும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்த சார்லி மங்கர், டெய்லி ஜர்னல் கார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதுபோக தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வளர்ச்சியில் சார்லி மங்கரின் பங்கு மிகப்பெரியது என வாரன் பஃபெட் கூறியுள்ளார்.