கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் துவாரகா நகரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்ப்பதற்காக, குஜராத் அரசு சார்பில் நீர்மூழ்கி கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.
மகாபாரத காலத்தில் பகவான் கிருஷ்ணர், துவாரகா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். பின்னர் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கியது.
தற்போது குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பிராந்தியம் அரபிக்கடல் பகுதியில் துவாரகா நகர் உள்ளது. இந்தியாவின் 7 புனித யாத்திரை தலங்களில் துவாரகையும் ஒன்று. அங்குள்ள துவாரகாதீஷ் கோவில், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.
இத்தகைய கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த துவாரகா நகரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிட சிறப்பு நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் குஜராத் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி, கடலுக்கு அடியில் குறிப்பிட்ட தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, நீருக்கடியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பார்கள்.
நீர்மூழ்கி கப்பலின் எடை சுமார் 35 டன். ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும். மேலும் இந்த கப்பலில் இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்கள், இரண்டு நீச்சல் வீரர்கள் மற்றும் ஒரு தொழில்முறை பணியாளர் இருப்பர்.
2024-ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக இந்த திட்டத்தை செயல்படுத்த குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.