இந்தோனேசியாவில் நேற்று இரவு 10.46 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று இரவு 10.46 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா மாகாணத்தின் அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.